சிறுவர் துஷ்பிரயோகம்:கட்டுக் கதைகளை விடுத்து, உண்மைகளைத் தீர அலசலாம், வாருங்கள்!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

Written by: Hashir Naufer, Faculty of Medicine, University of Colombo

(எழுதியவர்: ஹாஷிர் நவ்பர், மருத்துவ பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்)

சிறு வயதின் சிற்பங்களும், வடுக்களும் சிறுவர்களது வாழ்க்கை முடியும் வரை பாதிப்பு செலுத்துவது நடைமுறை உண்மை. கள்ளங்கபடமற்ற அந்த சிறு பராயத்தை இன்பமாக அனுபவிக்க வேண்டிய அச் சிறுவர்களில் பலர், உடல், உள, பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களைத் தாண்டியே தமது வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். உண்மையில் சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத நிலைமை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி உலா வரும் பல்வேறு கட்டுக்கதைகளின் தாக்கம் என்பன பல சிறுவர்கள் இவ்வாறான அனுபவங்களை தம்மகத்தே புதைத்து வைத்துக்கொள்ள வேண்டிய நிலைமையை உருவாக்குவதோடு, தற்காலத்தில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கும் வழி கோலுகிறது. எனவே, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கட்டுக்கதைகளையும், அவை மறைத்து நிற்கும் உண்மைகளையும் அலசுவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

**

1. கட்டுக்கதை: வன்முறையாக இருந்தால் மட்டுமே அது சிறுவர் துஷ்பிரயோகமாகும்!

உண்மை:

வன்முறையை அடிப்படையாக கொண்ட உடல் ரீதியான துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஒரு பகுதி மாத்திரமே. சிறுவர்களை கவனிக்காது, அவர்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்காது விடுவது முதல், உள, பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்கள் பலதும் வன்முறையற்றதாகவே நடைபெறுகின்றன. இவை அதிகமாக வெளியில் தெரியாத காரணத்தினால், அத் துஷ்பிரயோகம் தலையிட்டு நிறுத்தப்படும் சந்தர்ப்பங்கள் கூட அரிதாகவே நடக்கின்றன. உள ரீதியான துஷ்பிரயோகங்களில் அண்ணளவாக 25% ஆன சந்தர்ப்பங்களில், அவற்றுக்கு ஆதாரங்கள் கூட இருப்பதில்லை.

2. கட்டுக்கதை: மிகச் சிறிய குழந்தைகளே துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்றனர்.

உண்மை:

கைக்குழந்தைகள், சிறுவர்கள், பதின்ம வயதினர் என்ற அனைவர் மீதும் சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படலாம். பதின்ம வயதினரால் தம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்ற கதையாடல்கள் வந்தாலும், நம்பிக்கை மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்களாக நடந்தேறும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் அவர்கள் அதிகம் மாட்டிக் கொள்கிறார்கள். காரசாரமான வார்த்தைகள் முதற்கொண்டு, உள, பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களும் அவர்களை அதிகளவு பாதிக்கின்றன.

3. கட்டுக்கதை: சிறுவர்கள் துஷ்பிரயோகம் சம்பந்தமாக பொய்யான கதைகளைக் கூறுவார்கள்!

உண்மை:

துஷ்பிரயோகம் சம்பந்தமாக சிறுவர்கள் பொய் உரைப்பது அரிது. என்னவென்றே தெரியாத விடயங்களில் பொய்களைக் கட்டிக் கூறுவதென்பது முடியாத காரியம். சில வேளைகளில் உண்மையை மறைக்குமாறு அவர்கள் பயமுறுத்தப்பட்டாலோ, தமது குடும்பத்தைப் பிரிய நேரிடும் என்று அவர்கள் அஞ்சினாலோ, அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் தமது கதைகளை மாற்றிக் கூறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவே ஒழிய, துஷ்பிரயோகம் தொடர்பாக அவர்கள் பொய் உரைப்பது அரிதாகவே நடக்க முடியும்!

4. கட்டுக்கதை: உடல் ரீதியான தண்டனைகள் சிறுவர் துஷ்பிரயோகத்தில் அடங்காது.

உண்மை:

சிறுவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை அளிப்பதுவும், அவர்களை நல்வழிப் படுத்துவதுவும் பல முறைகளில் செய்யப்படலாம். உடல் ரீதியான தண்டனைகள் அவற்றில் ஒரு முறையே. உடல் ரீதியான தண்டனைகள் சிறுவர்களுக்கு காயத்தையோ, வேறு பாதிப்புக்களையோ ஏற்படுத்தினால் அவையும் உடல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகத்தைச் சாரும். அப்படியென்றால், சிறுவர்களைத் திருத்தவே கூடாதா? இல்லை! அதற்கான வேறு பல முறைகள் உண்டு. அவற்றின் மூலம் சிறுவர்களை நல்வழிப் படுத்துங்கள்.

5. கட்டுக்கதை: சில வேளைகளில் சிறுவர்களே சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்கின்றனர்.

உண்மை:

சிறுவர்கள் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. சிறுவர்கள் எவ்வாறு நடந்து கொண்டாலும், பெரியவர்களே தமது நடவடிக்கைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும். எக்காரணம் கொண்டும், சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் உரிமை எவருக்கும் இல்லை!

6. கட்டுக்கதை: ‘தீயவர்கள்’ தான் சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

உண்மை:

‘தீயவர்களால்’ மாத்திரமே சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறிச் செல்வது இலகுவானது. அனால், யதார்த்தத்தை எடுத்துக் கொண்டால், சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் பல பெற்றோர் தாம் செய்வது துஷ்பிரயோகம் என்று கூட அறிந்திருப்பதில்லை. அவர்களில் சிலர் தாம் வளர்க்கப்பட்ட அதே முறையில், அது துஷ்பிரயோகத்துடன் சேர்ந்தது என்பதையும் அறியாது, தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முயல்கின்றனர். இன்னும் சிலர் உள ரீதியான பிரச்ச்சினைகளுடனும், மதுபான, போதைப் பழக்கவழக்கங்களுடனும் தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முயற்சிக்கையில் அங்கு துஷ்பிரயோகம் நடக்கிறது!

7.கட்டுக்கதை: எனக்கோ, எனது நண்பர்களுக்கோ இது நடக்காது. ‘நல்ல’ குடும்பங்களில் இது நடப்பதில்லை!

உண்மை:

துஷ்பிரயோகமும் கவனிப்பாரற்ற நிலைமையும் வறுமையில் வாழும் குடும்பங்களிலும், தவறான சூழலிலும் தான் உருவாகின்றன என்றில்லை. இன, மத, கலாச்சார, பொருளாதார பின்னணிகளைத் தாண்டி பல சுற்றுச் சூழல்களில் சிறுவர் துஷ்பிரயோகம் நடக்கிறது. அனைத்தையும் தம்மகத்தே கொண்டதாகத் தெரியும் தனவந்த குடும்பங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் நடப்பது சாத்தியமே.

8. கட்டுக்கதை: சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் பலர் அச் சிறுவர்கள் அறிந்திராதவர்கள் ஆவர்.

உண்மை:

துரதிஷ்டவசமாக, உலகில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் 90%க்கும் அதிகமானவை சிறுவர்கள் நம்பி, உறவு பாராட்டும் நபர்களாலேயே நடக்கிறது. தாம் அறிந்து, தெரிந்து, அன்னியோன்னியமாகப் பழகும் தமது உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களாலேயே சிறுவர்கள் மீதான இத் துஷ்பிரயோகங்கள் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

9.கட்டுக்கதை: சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளான சிறுவர்கள் அனைவரும் வளர்ந்த பின்னர் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவார்கள்.

உண்மை:

சிறு பராயத்தில் துஷ்பிரயோகத்துக்கு ஆளான நபர்கள், தாம் பெற்ற அந்த அனுபவத்தை ஒரு வட்டமாக தமது சந்ததியினருக்கு செயற்படுத்தும் வாய்ப்பு இல்லாமலில்லை. அனால், சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய சரியான தெளிவு அவர்களால் பெறப்படும் போது, தாம் பெற்ற துன்பத்தை தன் சந்ததியினர் பெறக்கூடாது என்ற குறிக்கோளுடன் வாழ்பவர்களாக அவர்கள் மாறி விடுவது யதார்த்தமாகிறது.

10. கட்டுக்கதை: துஷ்பிரயோகம், கவனிப்பாரற்ற நிலைமை என்பவற்றால் நீண்ட கால பாதிப்புகள் எதுவும் இல்லை.

உண்மை:

துஷ்பிரயோகமும் கவனிப்பாரற்ற நிலைமையும் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கும் சிறார்கள் பிற்காலத்தில் குற்றவாளிகளாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமன்றி, அவர்களது கலங்களிலுள்ள டீ.என்.ஏ. அடிப்படைகளில் கூட துஷ்பிரயோகம் தாக்கம் செலுத்துவதாக விஞ்ஞானம் கூறிக் கொண்டிருக்கிறது.

11. கட்டுக்கதை: என்னைச் சுற்றிவர இருக்கும் சமூகத்தில் துஷ்பிரயோகத்தைத் தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது.

உண்மை:

அப்பட்டமான பொய் இது! எத்தனையோ வடிவங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், தம்மை வெளிப்படுத்திக் கொள்ளத் திணறும் அச் சிறுவர்களுக்காக குரல் கொடுப்பது முதல், அவர்களுக்கான உதவிகளை செய்வது வரை பல விடயங்களை எம்மால் செயற்படுத்த முடியும். துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் சிறுவர்கள் சம்பந்தமான விபரங்களை அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கோ, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு 1929 எனும் அவர்களுடைய தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அறிவிப்பதன் மூலம் கள்ளங்கபடமற்ற அச் சிறுவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்த நீங்கள் உதவுவீர்கள். கண்டும் காணாது சென்றால், நீங்களும் உடந்தையாகிறீர்கள்! எனவே, உங்களால் முடிந்த வகையில் உதவுங்கள்!

12. கட்டுக்கதை: சிறுவர்கள் தமக்கு நடக்கும் துஷ்பிரயோகம் சம்பந்தமாக குரல் கொடுக்க தெரிந்தவர்கள்.

உண்மை:

அதிகமான சிறுவர்கள் தாம் அனுபவிக்கும் துஷ்பிரயோகத்தை வெளியில் சொல்ல பயப்படுவார்கள். பத்து சிறுவர்களில் ஒருவர் என்ற அளவிலேயே அவர்கள் குரல் கொடுப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. தமக்கு துஷ்பிரயோகம் நடந்தால் அதனை தமக்கு நம்பகமான ஒரு பெரியவரிடம் கூறுமாறும், அதனால் எவ்வித பிரச்சினையும் வராது என்றும் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர்களது குரல்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

13. கட்டுக்கதை: சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டால், சிறுவர்கள் குடும்பத்தை விட்டு பிரிக்கப்படுவார்கள்.

உண்மை:

சிறுவர்கள் சரியாக கவனிக்கப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு அவர்களது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள உதவி தேவைப்படலாம். வீடுகளில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் சிறுவர்களை தற்காலிகமாக பராமரிக்கும் பொருட்டு அதிகாரிகளால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். அதுவே அச் சிறுவர்களின் நலனுக்கு மிகப் பொருத்தமானதாகவும் இருக்கும்.

14. கட்டுக்கதை: அனைத்து சிறுவர் துஷ்பிரயோக நிகழ்வுகளும் முறைப்பாடு செய்யப்படுகின்றன.

உண்மை:

அதிகமான துஷ்பிரயோகங்கள் முறைப்பாடு செய்யப் படாமலே கடந்து செல்கின்றன. அறியாமை, கட்டுக்கதைகள் காரணமாக சிறுவர்கள் தம் வாழ்க்கையை இழக்கின்றார்கள். நீதித்துறை, சட்டவாக்க மூலங்கள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளின் துணையுடன் ஒழுங்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் ஒரு சிறந்த நிலையை அடையக் கூடியதாக இருக்கும்.

15. கட்டுக்கதை: பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படும் சிறுவர்கள் பற்றிய முறைப்பாடுகள் செய்யப்பட்டால், துஷ்பிரயோகம் செய்தவரை மணமுடிக்க வேண்டி வரும் அல்லது அது ஊருக்கே தெரிய வரும்.

உண்மை:

பலர் இவ்வாறான கட்டுக்கதைகள் காரணமாக பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளைச் செய்வதிலிருந்து பின்வாங்குகிறார்கள். இது பொய்யானதொரு மாயையாகும். குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்படுமே தவிர, எந்த வித வற்புறுத்தல்களும் சிறுவர்கள் மீது திணிக்கப்பட மாட்டா. தேவையான இடங்களைத் தவிர, வேறு யாருக்கும் முறைப்பாடு தொடர்பான விபரங்கள் வழங்கப்படவும் மாட்டா. அநியாயமாக ஒரு சிறுவனுக்கோ சிறுமிக்கோ கிடைக்க வேண்டிய நீதியை இழந்து விட வேண்டாம்!

16. கட்டுக்கதை: ஆண்கள் மட்டுமே சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர்.

உண்மை:

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகமாக ஆண்களால் நடைபெறுவதாகக் கருதப்பட்டாலும், பெண்கள் மூலமாகவும் நடைபெறக்கூடிய பல சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. பாலியல் தவிர்ந்த உடல், உள ரீதியான சிறுவர் துஷ்பிரயோகம் முதல், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், கவனிக்காது விடுதல் போன்ற சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஆண், பெண் வேறுபாடின்றி பலரும் தவறிழைப்பது நிதர்சனமாக இருக்கிறது.

17. கட்டுக்கதை: சிறுவர் இல்லங்களில் மட்டுமே சிறுவர் துஷ்பிரயோகம் காணப்படுகிறது.

உண்மை:

அவ்வாறல்ல! வீடுகள், சுற்றுச் சூழல், பாடசாலை, தனியார் வகுப்புக்கள், போக்குவரத்து என்று சிறுவர்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் அநேகமாக அச்சிறுவர்கள் நம்பக்கூடிய நபர்களாவார்.

**

கட்டுக்கதைகள் ஏராளம் இருக்க, அதனால் பாதிக்கப்படும் சிறுவர்களும் தாராளமாக இருக்க, அக்கட்டுக்கதைகளை கட்டுடைத்து உண்மைகளை உலகுக்குத் தெரியப்படுத்துவது நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச முயற்சியாக இருக்கிறது. இப்பூலோகத்தை, சிறுவர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் சஞ்சரிக்கும் பூஞ்சோலையாக மாற்றுவது நம் கையிலேயே இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும் சமூகத்தையும் நாம் மாற்றுவோம். நாடும் உலகமும் தானாக மாறி விடுவதற்கு வெகு காலம் இல்லை. சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிரான எமது குரலுடன் (VACA) நீங்களும் இணைந்து குரல் கொடுங்கள். ஒன்றிணையுங்கள் – சிறுவர்களுக்கான சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கலாம்!

சான்றாதாரங்கள்:

  1. https://www.helpguide.org/articles/abuse/child-abuse-and-neglect.htm
  2. https://www.childhelp.org/blog/child-abuse-myths-misconceptions-prevention/
  3. https://www.qld.gov.au/community/getting-support-health-social-issue/support-victims-abuse/child-abuse/what-is-child-abuse/child-abuse-myths

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *